Tuesday, October 19, 2010

Vayalur Murugan Temple

வயலூர் முருகன் கோயில்
கோயில் அமைப்பு:-

'வயலூர் அருகிருக்க அயலூர் தேடி அலைவானேன்' என்பது பழமொழி. இங்குள்ள மூலவர் ஆதிநாதர் தம்மை வழிபட வருவோரை மறக்காமல் அவர் தம் வேண்டுகோளை நிறைவேற்றுவதால் 'மறப்பிலிநாதர்' என்றும், அக்கினி பகவான் இங்குள்ள இறைவனைப் பூஜித்த காரணத்தால் அக்கினீஸ்வரன் என்றும் அழைக்கப்படுகின்றார். பொதுவாகத் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் தாயார் சந்நிதியைக் காண்பது அரிது. இங்கு ஆதிநாயகி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கின்றார். வன்னிமரம் இங்குள்ள தலவிருட்சம்.
பொய்யாக் கணபதி
தன்னை அண்டி வந்த மெய்யன்பர்களை மெய்ஞ்ஞான நெறிக்கு உய்ப்பதில் பொய்க் காதவர் என்பதால் இப்பெயர் கொண்டுள்ளார். கணபதி தம் கையில் மாங்கனி அல்லது மாதுளங்கனிதான் வைத்திருப்பார். அங்குள்ள கணபதி தம்முடைய கையில் விளாங்கனி வைத்திருக்கிறார். விளாம்பழம் காயாக இருக்கும் போது தன் ஓட்டுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். நன்கு பழுத்து முதிர்ந்த பின் ஓட்டினின்றும் அகன்று விடும். இது போல் மானிடரும் பொய்யான வாழ்க்கையின் தொடர்பினின்றும் விடுபட்டு மெய்ஞ்ஞான உணர்வு பெறும் தத்துவத்தை விளக்கவே இவ்வாறு கணபதியின் கையில் விளாங்கனி தரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

'கைத்தல நிறைகனி...' என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடலில் அருணகிரியார் குறிப்பிடும் நிறைகனி விளாம்பழத்தையே குறிக்கும்.
......... உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
என்று தம்மைப் பாடவைத்த பொய்யாக் கணபதியை நிறைந்த நெஞ்சோடு வாழ்த்து கின்றார் அருணகிரியார்.

சுந்தர தாண்டவ மூர்த்தி


இங்கே கல்லால மரத்தினடியில் சுந்தர தாண்டவமாடும் மூர்த்தியின் சந்நிதிக்குத் தனிச் சிறப்புண்டு. தில்லையில் நடனமாடும் உருவத்தினின்றும் வித்தியாசமாக இங்கு தாண்டவமூர்த்தி சிலை வடிக்கப்பட்டுள்ளது.
வயலூர் முத்தித் தலம் என்பதால் அழிவுக்கு இங்கு இடமில்லை. எனவே தாண்டவ மூர்த்தியின் காலடியில் முயலகனும் இல்லை. ருத்திர தாண்டவம் இல்லாமல் அழகிய அமைதியான நடனம் என்பதால் சடாமுடி யில்லாமல் கிரீடம் அணிந்த சிரம் காணப்படுகிறது. தூக்கிய திருவடியும் இல்லை. விரல்கள் நிலத்தில் தோய நடனமாடும் உருவத்தில் காணப்படும் இம் மூர்த்தி யின் அழகைக் காணக் கண்கள் ஆயிரம் வேண்டும்.

சுப்பிரமணிய சுவாமி
திருப்புகழ் பாடிய அருணகிரியாரையும், அவர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களை மக்களி டையே பரப்புவதைத் தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்த கிருபானந்த வா¡ரியாரையும் அறியாதவர் இல்லை. ''நாள்தோறும் நான் வழிபடும் வயலூர் முருகனைக் கும்பிட்டு என் உரையைத் தொடங்குகிறேன்'' என்று தம் சொற் பொழிவை ஆரம்பிப்பது வாரியாரின் வழக்கம்.
தன் வாழ்நாளை வீணாக்கியதற்காக வெட்கப்பட்டுத் தன் உயிரைக் போக்கிக் கொள்ளத் திருவண்ணாமலையின் உச்சியிலிருந்து கீழே விழுந்த அருணகிரியாரைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய முருகப் பெருமான் அவரை வயலூருக்கு வாவெனப் பணித்தான். வயலூரைத் தேடி வந்தவரைத் தன்னைப் பாடுமாறு பணித்தான் முருகன். ஏடும் எழுத்தும் அறியா மூடன் பாடுவது எப்படி என்று கேட்ட அருணகிரியாரின் நாவில் தன் வேலால் பிரணவ மந்திரத்தை எழுதி, 'முத்து' என்று ஆரம்பித்துப் பாடுமாறு சொல்ல, 'முத்தைத்தரு பத்தித் திருநகை...' என்று தொடங்கி மடைதிறந்த வெள்ளம் போல் திருப்புகழ்ப் பாடல்கள் பொங்கி வந்தன.
'வாக்கிற்கு அருணகிரி' என்ற வாக்கின்படி எந்தமொழி இலக்கியத்திலும் காணக் கிடைக்காத அளவிற்குச் சந்த விகற்பங்கள் மிக்க திருப்புகழ்ப் பாடல்களைப் பிறக்க வைத்த பெருமை வயலூர் முருகனைச் சேரும்.
இங்குள்ள சுப்பிரமணிய சுவாமிக்குத் தனிப்பெருமை உண்டு. மற்றத் தலங்களில் தாய் தந்தையரை முருகப்பெருமான் தனித்து நின்று பூசை செய்திருக்க, வயலூரில் மட்டும் தெய்வயானையுடனும் வள்ளியுடனும் சேர்ந்து பூசை செய்கின்றான். தாய் தந்தையரை வணங்காதவர்களுக்கு இறைவனருள் கிட்டாது என்பது வேதவாக்கு. முருகப்பெருமான் இங்கு தன் கையிலுள்ள வேலால் சக்தி தீர்த்தம் அமைத்து, அதில் நீராடி தன் மனைவியருடன் பெற்றோரைப் பூசித்து வழிபட்டனன்.
மயில் வாகனன் முருகன், வள்ளி, தெய்வயானை இல்லாமல் தனித்துக் காட்சி தரும் கோலத்தில் மயில் மீதில் அமர்ந்திருக்கையில் மயிலின் முகம் நேர்கொண்ட பார்வையில் காணப்படும். வள்ளி தெய்வ யானையுடன் முருகன் அமர்ந்திருக்கும்போது மயிலின் முகம் வலப்புறமாக நோக்கி யிருக்கும். வலப்புறம் வள்ளியும் இடப்புறம் தெய்வயானையுமாய்க் காட்சி தரும் முருகனைத்தான் கோயில்களில் பெரும்பாலும் காண முடியும். போகவாழ்வு தரும் முருகனின் கோலம் இது. ஆனால் வலப்புறம் தெய்வயானை அமர, இடப்புறம் வள்ளி என்ற கோலத்தில் ஞானியர்க்கு முக்திக்கு தரும் மூர்த்தியாகக் காட்சிதரும் முருகனாக வயலூர் சுப்பிரமணிய சுவாமி விளங்குகின்றான்.
அருணகிரியார்
வயலூருக்கு அழைத்தவனும் முருகன். வாய்நிறையத் திருப்புகழ் பாட வைத்தவனும் முருகன். எனவே வயலூர்க் கோயிலில் அருணகிரியாருக்குத் தனிச்சந்நிதி அமைந்திருப்பதில் வியப்பில்லை.
இவரது சந்நிதிக்கு எதிரிலே தட்சிணாமூர்த்தி சந்நிதியும் இடப்புறம் பொய்யாக் கணபதி சந்நிதியும் அமைந்திருக்கின்றன. ஞானாசிரியன் தட்சிணாமூர்த்தி, அவர் வழி நடத்தி ஞானம் பெற்றுப் பாடிய அருணகிரி, அவருக்கு அருள் செய்த கணபதி மூவரும் அருகருகே அமர்ந்திருப்பது எத்தனை பொருத்தம்.

முத்துக்குமார சுவாமி
மயில் மீதில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் முத்துக்குமார சுவாமியின் தோற்றத்தில் ஒரு தனிப் பொலிவைக் காணலாம்.
அருணகிரி வாக்கில்
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளும் நாயக வயலூர்!

என்று முத்துக்குமார சுவாமியின் கம்பீரம் போற்றப்பட்டுள்ளது.