Tuesday, September 28, 2010

செண்பக விநாயகர் கோயில் [சிலோன் ரோடு]

பிடியதன் உருவுமை கொள்மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை
                                                        -- திருஞான சம்பந்தர் --

ஓம்  ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தீ ப்ரஜோதயாது
இறைவன் அல்லது பரம்பொருள் ஒன்றே. சரம் அசரம் என்ற எல்லாப் பொருள்களிலும் தங்கியிருப்பவன் இறைவன்.'' பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூண ஆனந்தமே'' ;

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது''  இறை. ஐந்தொழில் புரியும் சிவன், சிவக்கனல் முருகன், மோனஞான போத தெட்ச்சணா மூர்த்தி, பராசக்தி பரம்பொருளின் ஆச்சா,கிரியா, ஞான சக்தியின் கூட்டு. அவ்வாறே இறைவனின் திவ்விய வல்லமையின் வடிவம் என்று கூறப்படுவது விநாயகர்.

விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் காணபத்யம். ஆனால் இந்து மதம் முழுவதற்கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர்.எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்னும் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் போது காரியம் சித்தியடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் விநாயகர் வழிபாட்டில் விநாயகரை உருவத்தில் கொண்டு வருவதும் எளிது. மண்ணினால், சாணத்தினால், அரிசி மாவினால், மஞ்சளினால் பிள்ளையாரை எளிதில் உருவாக்கிடலாம். வேறு சின்னம் அகப்படாத இடத்து அருகம்புல் அவருக்கு அறிகுறியாக வந்து நிற்கும். இயற்கையின் முறைமைகளைக் காக்கச்  சிவசக்தியின் அருட்பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான் என்பது ஐதீகம்.

ஆண், பெண் பேதத்திற்கு அப்பாற்பட்டவர். ஆகையால் மற்ற தெய்வங்களைப் போன்று அவருக்குச் சிக்தி, புத்தி என இரண்டு சக்திகளை அவரோடு இணைத்துச் சொல்வது உண்மையாய் அவர் மகிமையை விளக்குவது ஆகும்..  விநாயகரின் உருவமானது பல்வேறு தத்துவங்களை நமக்குப் புகட்டுகிறது. விநாயகர் 'ஓம்'கார மூர்த்தியானவர் என்பதை விளக்க ஆனைமுகத்தானாக அவர் உருவெடுத்துள்ளார். அண்டங்கள் யாவும் அவனிடத்து அடங்கியுள்ளன என்பதை விளக்க அவரது பேழை வயிறும், தன்னிடத்துத் தங்கியிருக்கும் யாவையும் தனது சக்தியால் தாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை வயிற்றைச் சுற்றியிருக்கும் சர்ப்பமும் உணர்த்துகிறது. ஆற்றலிலே மானுடரை விட மிக்கவர் என்பதைக்  காட்ட தும்பிக்கையுட்பட்ட  ஐந்து கைகளைக் கொண்டுள்ளார்.  மக்களை நல்வழியில் நடத்துதலை உணர்த்த அங்குசமும் துன்பத்திலிருந்து காக்கப் பாசமும், சிந்தனாசக்தி வளர்ப்பது அவசியம் என்பதைக் காட்ட ஜபமாலையும், கல்வியை உணர்த்த தந்தமும், அவரது கைகளில் இருக்கின்றன. மேலும் தும்பிக்கை எப்பக்கம் வளைந்து உள்ளதோ அதன்படி வலம்புரி விநாயகன், இடம்புரி விநாயகன் என இயம்பப்படுகிறார்.

விநாயகருக்கு இன்னும் பல பெயர்கள் அடியார்களால் வழங்கப்படுகின்றன. மூஷிகவாகனன் [பெருச்சாளி வாகனன்]  வித்யராஜன்.[கல்விக்கு அரசன்]  ஓங்காரரூபன்[ ஓம் என்னும் மந்திர வடிவினன்], ஞானகணபதி [ஞானியர் கூட்டத்திற்கு தலைவன்] விநாயகர் வழிபாடு யாவருக்கும் எளிதானதாகவும், விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் எக்காரியமும் சித்திபெறும் என்பதாலும் இந்து சமய மக்களிடமும் ஆதிகாலந்தொட்டு நிலவிவருகிறது. விநாயக சதுர்த்தி,
விநாயக சஷ்டி, போன்ற விரத தினங்கள் விநாயகரை நினைந்து அனுசரிக்கப்படுகின்றன.

ஆலய வரலாறு

   செண்பக விநாயகர் ஆலயம் 1800 -ஆம் ஆண்டு  இறுதியில் தோற்றம் கண்டதாக வாய்மொழி வரலாறு.
சிங்கப்பூர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது காத்தோங் எனும் இடம். இப்பகுதியிலிருந்த நீர்த் தேக்கத்தில் ஒரு விநாயகர் சிலை கண்டு எடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை அருகிலி-ருந்த செண்பக மரத்தடியின் கீழ் வைத்து வழிபடத் தொடங்கினார்கள். ஑செண்பக மரத்தடியின் கீழ் இருந்த காரணத்தால் இந்த விநாயகருக்கு ஑ஒசெண்பக விநாயகர்ஒஒ என்ற காரணப் பெயரும் அமைந்தது.

 1875 -லிருந்து காத்தோங் பகுதியில், இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் அதிகமாக இருந்தனர்.  அவர்களில் முன்னோடியாக இருந்தவர் தியாகராஜா எதிர்நாயகம் பிள்ளை எனும் பெரியார். தியாகராஜா எதிர்நாயகம் பிள்ளையுடன் அப்பகுதியில் வாழ்ந்த இலங்கை தமிழர்களும் சேர்ந்து இந்த செண்பக விநாயகருக்கு  நாள்தோறும் பூஜைகள் செய்து வந்தார்கள். ஆரம்ப காலத்தில் வெட்ட வெளியில் அமர்ந்திருந்த செண்பக விநாயகருக்கு மரத்தைச் சுற்றி ஒரு சின்னக் கூரை குடிசை அமைத்துள்ளார்கள்.

 "சிலோன் ரோடு"ம் காரணப் பெயராகவே அமைந்தது. இலங்கையிலிருந்து வந்த இலங்கை தமிழர்கள் தங்கள் உற்றார், உறவினர், ஊர்க்காரர்கள் இப் பகுதியில் வாழ்ந்து வந்த காரணத்தால் வந்தவர்களும் இங்கேயே  தங்கிவிட்டார்கள். மற்றப் பகுதியிலிருந்து செண்பக விநாயகர் ஆலயம் வருபவர்களுக்கு அறிவிக்க ஓர்  அறிவிப்புப் பலகையில் "சிலோன் ரோடு" என்று குறித்து வைத்தார்கள். அதுவே பிற்காலத்தில்,  காலவோட்டத்தில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

அக்காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பால் தரும் பசுவை இலக்குமியாக, தெய்வமாக, காமதேனுவாக வணங்கினார்கள். ஆகையால் சிங்கப்பூரின் ஆரம்பக் காலத்தில் நம்மவர்கள் நிறைய மாடுகளை வளர்த்து,   பசு தரும் பாலை வியாபாரமும் செய்தார்கள். மாட்டுப் பண்ணை வைத்திருந்தவர்கள், செண்பக விநாயகரை வணங்கிவிட்டுத் தங்கள் காணிக்கையாகப் பால் தந்துள்ளார்கள்.

இலங்கை தமிழர் சங்கம் 1909-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1923- ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின் சார்பில் இலங்கையில் இருந்து வந்த முன்னோடி ஒருவரால் இப்போதுள்ள நிலம் வாங்கப்பட்டது. பிறகு இந்த ஆலயம் இலங்கை தமிழர் சங்க அமைப்பின் அறங்காவளர்கள் பொறுப்பின் கீழ் வந்தது. இலங்கை தமிழர் சங்க அமைப்பின் தலைவராக இருந்த Dr ஹாண்டி. (Dr.J.M.Handy) என்பவரின் நன்கொடையால் 11 ஹாண்டு சாலையில் இலங்கை தமிழர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது.

பின்னர் 1977- ஆம் இந்த நிலம் மறுசீரைமப்பு காரணத்தால் அரசாங்கம் கையகப்படுத்தியதால், இப்போதிருக்கும்  ஑பாலிஸ்டர் சாலைக்குஒ  இலங்கை தமிழர் சங்கம் கொண்டு வரப்பட்டது.

சாதாரணக் கூரையுடன் வேயப்பட்ட ஆலயமாக இருந்த செண்பக விநாயகர் திரு.சோமநாதர் முத்துக் குமாரு பிள்ளை என்பவரின் தலைமையில் செங்கல், சிமெண்ட கட்டடமாக அமைக்கப்பட்டது. இதன் முதலாவது கும்பாபிஷேக குட முழுக்கு விழா 1930- ஆம் ஆண்டு சனவரி 3-ஆம் நாள் நடைபெற்றது.

1939 - ஆம் ஆண்டில் இந்தக கட்டிடத்தில் நூல் நிலையம், பணியாளர்களுக்குத் தங்கும் வசதி ஆகியவை செய்யப்பட்டன. இந்து சமுதாயத்தினருக்கான சமயக் கல்வியின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு 1937 - இல் சமயக் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 1940- இல் செண்பக விநாயகர் ஆலயத் தமிழ்ப் பள்ளி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுச் சமய நிகழ்ச்சிகள், வகுப்புகள் நடைபெற்றன.

இரண்டாம் உலகப்போரில் 1942 சனவரி 22- ஆம் நாள். ஜப்பானியரின் குண்டு வீச்சால் ஆலயமும் அதன் சொத்துக்களும் சேதமடைந்த போதிலும், மூலஸ்தான விக்கிரத்திற்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

1955 ஜூலை 7-ஆம் நாள் ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதே ஆண்டில், சண்டேஸ்வரர் சந்நிதி அமைக்கப்பட்டது. 1961 - இல் ஆலயத்தின் இரு மருங்கிலும் பெரிய மண்டபம் ஒன்றும், மடைப்பள்ளி, இரண்டு கழிப்பறைகள், இரண்டு வகுப்பறைகள் ஆகியவையும் கட்டப்பட்டன.

1960 இன் பிற்பகுதியிலிருந்து 1980 -ம் ஆண்டு வரை,ஆலயத்தின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்தன. 1970 சனவரியில் ஆலயத்தில் 60 அடி உயர் இராஜகோபுரம் கட்டப்பட்டு மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.1983 ஆம் ஆண்டு புதிதாக ஒரு முத்து மண்டபம் அமைத்து 1983 - ஆம் ஆண்டு 11 நாள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்று மாடியுடன் பல் நோக்கு மண்டபம், திருமணம் மண்டபம், புதிய ஏழு வகுப்பறைகள், நூலகம் என புதிப்பிக்கப்பட்டு 1989 ஆம் ஆண்டு, நவமபர், 8 -ஆம் நாள் திறப்பு விழா கண்டது.பல்வேறு இனமக்களின் நன்கொடைகளின் மூலம் 72 அடி உயரமும் 5 நிலைக்கொண்ட கோபுரம் கட்டப்பட்டது.

மூலவராக விநாயகர் வீற்றிருக்கிறார். வலது பக்கம் அருவுருத் திருமேனியான சிவலிங்கத்தையும் , இடது  பக்கம் மனோன்மணி அம்மையும் இருக்கிறார்கள். ஆலய சுற்றி வட்டத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன்  தனி மண்டப ஆலயத்தில் இருக்கிறார்கள். திருச்சபை மண்டபத்தில் நடராஜரும், சிவகாமி அம்மையும் வீற்றிருக்கிறார்கள். பைரவர், பஞ்ச முக விநாயகர் உடன் உறைகிறார்கள்.

கோபுரத்தில் சுதையிலான விஷ்ணு, விநாயகர், முருகன், சிவன், அம்பாள், பிரம்மா என 159 சிலைகள் இராஜகோபுத்தில் இடம் பெற்றுள்ளன. ஐந்தாவது மகா கும்பாபிஷேகம் 2003 ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாள் நடைபெற்றது.

செண்பக விநாயகர் ஆலயமாகையால் வாயிலில் செண்பக மரம் இருக்கிறது. நம்மையும் செண்பக மணத்துடன் விநாயகர் வரவேற்கிறார். அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஆலயம் மனதுக்கு இதமளிக்கிறது. வாகனப் போக்குவரவு சத்தம் காதை துளைக்காத சூழ்நிலை. தூய்மையான ஆலய பாரமரிப்பு.

 மனித வாழ்க்கை அர்த்தமற்றதாக வாழ்வதற்கல்ல. இறைவனை, ஆன்மீகத்தை அறிந்து தியானித்து வாழ்க்கையைச் செம்மைப் படுத்தவே மனிதப் பிறப்பு.

இந்து சமுதாயத்தின் மிக முக்கியச் சமய அமைப்பாக இந்த ஆலயம் இன்று திகழ்வதோடு, சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமய, இனத்தவரின் ஆதரவையும் மிகச் சிறப்பான முறையில் பெற்றிருக்கிறது.

 சிறப்பு பூஜைகள், பொங்கல், சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை,சித்ரா பெளர்ணமி, திருவிளக்கு பூஜை, மஹோற்சவம், வைரவர் பூஜை, ஆடி வெள்ளி, நவராத்திரி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களும், பூஜைகளும் நடைபெறுகின்றன.

ஆலய முகவரி;
Sri Senpaga Vinagar Temple,
19, Ceylon Road,
Singapore. 429613
Tel. 63458176, fax.63442584


நன்றி:  தமிழ் மரபு அறக்கட்டளை

No comments:

Post a Comment